திண்டுக்கல் பழனி அருகே உள்ளது, புஷ்பத்தூர் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக பாஜகவைச் சேர்ந்த செல்வராணி மகுடீஸ்வரன் உள்ளார்.
ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குள் வரும் புஷ்பத்தூர் ஊராட்சித் தலைவரை செயல்பட முடியாத வகையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் தூண்டுதலின்பேரில் காரணமின்றி ஊராட்சி மன்றத்தலைவருக்கான காசோலை அதிகாரத்தை முடக்கி வைத்து, உணவுத்துறை அரசு அலுவலர்கள் தடுப்பதாக குற்றம்சாட்டி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அலுவலர்கள் யாரும் வராததால் கோபமுற்ற பாஜகவினர், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் ஆயிரக்கணக்கானோர் திடீரென நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் நுழைய முடியாதபடி காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்திய போதிலும் தடுப்புகளை உடைத்துக்கொண்டும் நுழைவுவாயில் கேட்டை உடைத்தும், சுவற்றில் ஏறி குதித்தும் ஒன்றிய அலுவலகத்திற்குள் நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தற்பொழுது அலுவலகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துமீறி நுழைந்தவர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நெருங்கும் அதிமுக பொதுக்குழு : எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் ஆதரவு...