திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தால் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது என தெரிவித்தார். மேலும், நடைபயணம் செல்வது அவரது உரிமை. தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்றுக் கொள்ள முடியாத பல நிபந்தனைகள் உள்ளது. ஆகவே தமிழ்நாடு அரசு நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் பெரியசாமி சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பருத்தியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடையாது. ஆகவே பருத்தி விவசாயிகளை காக்க தமிழ்நாடு அரசு பருத்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும்.
தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வுக்கு கடந்த சாகுபடியின் போது போதிய விலை கிடைக்காததால் அதிகளவு இந்த முறை சாகுபடி செய்யப்படவில்லை. இதனால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. விலை ஏற்றம் மற்றும் விலை குறைவை கட்டுபடுத்த அரசு தலையிட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து வியாபாரம் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்பதால் சாகுபடி செய்வார்கள். அதேபோல் பொதுமக்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். அப்போது தான் சம நிலை ஏற்படும் ஆகவே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அரசு முன் வர வேண்டும்.
தமிழ்நாட்டில் விலையில்லா அரிசியை ஏழை, எளிய மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாடு அரசு ஒரு கிலோ அரிசி ரூபாய் 20க்கு வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது கூடுதலாக அரிசி வேண்டுமென்றால் வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேநேரம் வெளிப்படையான டெண்டர் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு கிலோ அரிசியை ரூபாய் 31க்கு மத்திய அரசு வழங்குகிறது. அவர்களிடமிருந்து கூடுதல் விலை ரூபாய் 50க்கு வாங்கிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. விலையில்லா அரிசியை வாங்கி சாப்பிடும் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் மத்திய அரசு அடிக்கிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அரிசி விலை பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி சட்டம் ஒழுங்கை சீர்கேடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மணிப்பூரில் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டு உள்ளது இதனை பாஜக தலைவர் அண்ணாமலையோ, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ கண்டு கொள்ளவில்லை.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு அடிப்படை காரணமே பாரதிய ஜனதா கட்சி என்றார். குறிப்பாக, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலை அரசியலாக்கி வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருவது பாரதிய ஜனதா கட்சி தான். இந்துக்களை தவிர பழனி முருகன் கோயிலுக்கு வேறு மதத்தினை சேர்ந்தவர்கள் வரக்கூடாது என்று கூறுவது ஏற்புடையது அல்ல.
பாஜகவின் இந்த செயல் வன்மையான கண்டனத்துக்குரியது ஆகும். தமிழ்நாடு அரசு ஒரு பக்கம், ஆளுநர் ஒரு பக்கம் என்ற செயல்பாடு இருக்கும்பொழுது தமிழ்நாட்டில் அரசு செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும். தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ரவி பார்த்து வந்துள்ளார். இதற்குப் பின் தனது போக்கை மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம். ஆளுநர் நடவடிக்கை பின்னால் மோடியும், அமித்ஷாவும் உள்ளனர் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. மத்திய அரசு மோடி, அமித்ஷா பின்புலம் இருப்பதால்தான் இவ்வாறு ஆளுநர் ரவி பேசி வருகிறார். ஆளுநர் செயல்பாடு பற்றி தமிழ்நாடு முதல்வர் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.இது தொடர்பாக சுதந்திரமான முடிவை குடியரசு தலைவர் எடுக்க வேண்டும் எனவும் ஆளுநரை மாற்றுவதற்கு குடியரசு தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:விலைவாசி உயர்வு; திமுக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - முழுவிவரம்!