திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்துள்ள முத்தனம்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான நர்சிங் செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியின் தாளாளராகவும், திண்டுக்கல் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார், ஜோதி முருகன்.
இவர் தனது கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி, கடந்த மாதம் 19ஆம் தேதி கல்லூரி மாணவ- மாணவிகள், திண்டுக்கல் - பழனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 வழக்குகள்
இதனையடுத்து, 3 மாணவிகள் கொடுத்தப் புகாரின் பெயரில் திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் துறையினர் போக்சோ சட்டம் உட்பட 14 பிரிவுகளின்கீழ் 3 வழக்குகள் பதிவு செய்தனர்.
மேலும் இதற்கு உடந்தையாக இருந்த கல்லூரியின் விடுதிக் காப்பாளர் அர்ச்சனாவையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவான ஜோதிமுருகன் திருவண்ணாமலை போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதனையடுத்து கடந்த வாரம், திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜரான ஜோதிமுருகனை பத்தாம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும் படி, நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு பிணை வேண்டுமென ஜோதிமுருகன் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து,இரண்டு போக்சோ வழக்கில் ஜாமின் வழங்கும் படி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து நாள்தோறும் வடமதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிட்டார். மேலும் ஒரு வழக்கு இருப்பதால் ஜோதிமுருகன் பழனி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி போடாதவர்கள் வெளியே செல்ல தடை - அரசு அதிரடி அறிவிப்பு!