இந்தியா முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவுதலை தடுக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் வந்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அரசு பிறப்பித்த உத்தரவைமீறி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் நிலக்கோட்டை விருவீடு, பட்டிவீரன்பட்டி, வாடிப்பட்டி, பழைய வத்தலக்குண்டு பகுதியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்களை ஏற்றி வருவதும் அவர்கள் சந்தை மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு அழைத்துச் செல்வதுமாக இருந்துள்ளனர்.
இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 15க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை பிடித்தனர். அப்போது ஆட்டோ ஓட்டுனர்கள் தாங்கள் காய்கறி கொண்டு செல்வதாகவும் பூக்கள் கொண்டு செல்வதாகும் கூறியுள்ளனர்.
ஆனால், ஆட்டோவில் பொதுமக்களை தங்களது பகுதியில் இருந்து அழைத்து வந்துள்ளதை அறிந்த காவல்துறையினர் ரூ.500 அபராதம் விதித்தனர் .
மீண்டும் இதேபோன்று செயல்பட்டால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. அதேபோல் காவல்துறையினர் வாகன சோதனையின்போது நான்கு ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் நகர் பகுதியில் சுற்றித் திரிந்ததால் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தமிழ் குடும்பங்களை மீட்க ஸ்டாலின் வேண்டுகோள்!