திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்படும் லாரிகளை குறிவைத்து தொடர்ந்து பேட்டரிகள், டீசல் திருடு போவதாக ஓட்டுநர்கள் தொடர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் வேடசந்தூர், தாடிக்கொம்பு, திண்டுக்கல், அம்பாத்துறை, அம்மையநாயக்கனூர் உள்ளிட்ட காவல் சரகப் பகுதிகளில் இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 16 பேட்டரிகள், 400 லிட்டர் டீசல் வரை திருடு போயுள்ளது.
இதனைத் தடுக்கும் விதமாக அனைத்து லாரி நிற்கும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. இந்நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு, சந்தேகிக்கும்படி செட்டியபட்டி பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய நபரை லாரி ஓட்டுநர்கள் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து, அம்பாத்துறை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், கைதான நபர் வடமதுரையைச்சேர்ந்த வீரபாபு என்பதும் அவர் வைத்திருந்த பையில் ஸ்பானர், திருப்புலி, கட்டர் உள்ளிட்ட பொருள்கள் வைத்திருந்ததால் காவல் துறை சந்தேகமடைந்தனர். இதனிடையே இவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் தங்களின் ஓட்டுநர் உரிமம், வாகனச் சான்று உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக ஓட்டுநர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ’ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள்' - நீதிபதிகள் கடும் விமர்சனம்