திண்டுக்கல்: அரியர் தேர்வுகளை ரத்துசெய்து உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மாணவர்கள் சுவரொட்டி ஒட்டியிருக்கும் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக கல்லூரி இறுதி பருவத்தேர்வு தவிர, பிற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இதனால் அனைத்து கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரிகளின் பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பபட்டன.
இதையடுத்து கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் கொண்டாட்டத்தையும், வரவேற்பையும் பெற்றது. குறிப்பாக மாணவர்கள் தேர்வுக் கட்டணம் கட்டினாலே தேர்ச்சி என்றது, அரியர் மாணவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக அரியர் வைத்து தேர்வு எழுதாமலேயே தேர்ச்சிபெற்ற மகிழ்ச்சியில் மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சரை வாழ்த்தி பதாகைகளையும், சுவரொட்டிகளையும் வைத்து பல வகைகளில் தங்களது நன்றியை தெரிவித்துவருகின்றனர்.
இச்சூழலில், திண்டுக்கல்லில், மாணவர்களின் பாகுபலியே, அரியரை வென்ற அரசனே என முதலமைச்சரை வாழ்த்தி கல்லூரி மாணவர்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இந்த சுவரொட்டிகள் திண்டுக்கல் நகரின் மையப்பகுதியான ரவுண்ட் ரோடு அருகே ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டி நிகழ்வு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.