திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் 48ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் திமுக, அதிமுக, பல்வேறு கட்சியினர் தற்போது தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு டிஜிட்டல் பேனர்கள் தங்களது கட்சியின் தலைவர்கள் படங்களுடன் ஒவ்வொரு வீதியிலும் வைத்துள்ளனர்.
இந்நிலையில் மாநகராட்சி 32ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வினோத்குமார் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியில் 32ஆவது வார்டு பொதுமக்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் படத்துடன் டிஜிட்டல் பேனர் ஒன்றை கட்சி தேர்தல் அலுவலகத்தில் வைத்திருந்தார்.
பேனர் கிழிப்பால் சர்ச்சை
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 13) அதிகாலை தேர்தல் பரப்புரைக்காக கட்சி அலுவலகத்திற்கு வந்த அதிமுகவினர், வேட்பாளர் வினோத் ஆகியோர் பேனர் தாறுமாறாகக் கிடந்ததைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த அதிமுக தேர்தல் கட்சி அலுவலகத்திற்கு எதிரே திமுகவின் கட்சி தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதே வார்டில் இருக்கக்கூடிய திமுகவினர் கிழித்திருக்கலாம் என்று மாநகராட்சிப் பகுதியில் உள்ள அதிமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் இப்பகுதிக்கு வரத் தொடங்கி பேசிக் கொண்டிருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த நகர் வடக்கு காவல் துறையினர் வேட்பாளர், கட்சியின் பொறுப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேனரைக் கிழித்த நாய்கள்
உடனடியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். அதில் நள்ளிரவு நேரத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் டிஜிட்டல் பிளக்ஸ் பேனரை தாவித்தாவி கடித்து இழுத்து கிழித்துவிடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக அதிமுகவினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு பெரும் பரபரப்பான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
இதையும் படிங்க:தேர்தலில் அராஜகம் காட்டும் திமுக: ஆளுநரிடம் முன்னாள் அமைச்சர்கள் புகார்