திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டாட்சியர் லதா. இங்கு அவர் ஆறு மாதங்களாகப் பணிபுரிந்து வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேடசந்தூர் தாலுகா முழுவதிலுள்ள பல பகுதிகளில் இருந்து வட்டாட்சியருக்கு அதிகப்படியாக சன்மானங்கள் வழங்கப்பட்டு வருவதாக ஊழல் தடுப்பு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், மாவட்ட ஊழல் தடுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில், ஆய்வாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர், வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, இரவு 9 மணி அளவில் சோதனைக்குச் சென்றனர். அப்போது வட்டாட்சியர் லதா வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். வட்டாட்சியரின் காரை மறித்து அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், அலுவலக அறையில் வைத்து அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அவர் சென்ற அரசு காரை சோதனை செய்ததில், அவரின் கைப்பை மற்றும் காரின் இருக்கைப் பகுதியில் இருந்து ரூ.46 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல் காரில் இருந்த பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க : ஆற்றில் புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் மீட்பு: காவல் துறை விசாரணை!