தமிழ்நாடு அரசு வழங்கிய 2019-ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்புத்தொகையை வழங்காத 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை கண்டித்து அதன் ஊழியர்கள் கடந்த ஆறு மாத காலமாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களை சந்தித்து தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு துண்டுப்பிரசுரம் வினியோகிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மதுரை மண்டல 108 ஆம்புலன்ஸ் செயலாளர் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தை வலியுறுத்தி மக்களை சந்தித்து ஆதரவு கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இன்று முதல் ஒரு வாரத்திற்கு மக்களை சந்தித்து தங்கள் கோரிக்கைக்கு ஆதரவு கேட்கும் போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்றும் கூறினார்.
இதன் அடுத்த கட்டமாக வரும் 30-ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து நிர்வாகம் தங்கள் கோரிக்கைக்கு பதிலளிக்காவிட்டால் மாநில நிர்வாகிகள் கூடி அடுத்த கட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவிப்போம் என்று தெரிவித்தார்.