திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த வடகாடு ஊராட்சியில் மொத்தம் உள்ள ஒன்பது வார்டு உறுப்பினர்களில் எட்டு பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டுமே அதிமுகவைச் சேர்ந்தவர். இதனால், ஊராட்சி மன்றத் தலைவராக திமுக உறுப்பினர் உள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன், பூட்டியிருந்த ஊராட்சி அலுவலகப் பூட்டின் மேல் மற்றொரு பூட்டை அதிமுகவினர் பூட்டினர்.
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது, ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி போலீசாரிடம் புகார் மனு அளித்தார்.
அதில், ‘வடகாட்டைச் சேர்ந்த கணேசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வீராச்சாமி, முன்னாள் உறுப்பினர் ஆனந்தன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சிலர், தான் (தனலட்சுமி) ஊராட்சி அலுவலகத்தில் அமர்ந்து நிர்வாகம் நடத்தக்கூடாது. வெளியில் கூரை ஷெட் அமைத்து நிர்வாகம் நடத்த வேண்டும் என மிரட்டி, அலுவலகத்தில் கூடுதல் பூட்டு போட்டனர்’ என்று அந்த மனுவில் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, ஊராட்சி தலைவர் பெயரை அவர்கள் கட்சி நிறத்தில் எழுதியதைப் போல் அதிமுக உறுப்பினர் பெயரையும் தங்கள் கட்சி நிறத்தில் எழுத வேண்டும். முதலமைச்சர் பழனிசாமி புகைப்படத்தை மாட்ட வேண்டும் என்று வலியுறுத்தி அலுவலகத்துக்கு பூட்டு போட்டதாகக் கூறினர்.
இதையும் படிங்க: ஓமலூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி