திண்டுக்கல்: நிலக்கோட்டையில் தேர்தல் பணிக்குழு சிறப்பு முகாம் நேற்று (அக்.4) இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற அதிமுக உறுப்பினர் தேன்மொழி சேகர், ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன், நல்லதம்பி, பேரூர் கழக செயலாளர்கள் நிலக்கோட்டை சேகர், அம்மையநாயக்கனூர் தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை பொதுச் செயலாளரும், திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, "அதிமுக கூட்டணியில் இருந்த பிஜேபி விலகிச் சென்றதால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அதிமுக வெற்றிக்கு பிஜேபி தடையாக இருந்தது. பிஜேபி அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் நாம் இப்போது வெற்றி நடை போட்டு வருகிறோம். பிஜேபி இருந்தது, காலில் ஒரு கட்டையை கட்டிக்கொண்டு ரேஸில் ஓடியது போல் இருந்தது.
அதிமுக வெற்றிக்கு பொதுமக்கள், தொண்டர்கள் சரியாக உள்ளனர். நமது வெற்றி இலக்குக்கு இடையூறாய் இருந்தது பிஜேபி ஒன்று மட்டும்தான், அந்தத் தடையும் இன்று நீக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அதிமுக வெற்றியை தடுப்பதற்கு எந்த கொம்பனாலும் முடியாது.
இரண்டு ஆண்டுகள் கூட அரசியல் அனுபவம் இல்லாத கத்துக்குட்டி அரசியல்வாதியை வைத்துக்கொண்டு எல்லாத்தையும் தெரிந்தது போல் இருந்து கொண்டு ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, கடைசியில் நம்மை கடித்துவிட்டார். கூட்டணியில் இருந்து கொண்டு புரட்சித்தலைவி அம்மாவை விமர்சனம் செய்கிறார். கூட்டணி தர்மத்தை தெரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டார்.
அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகாவது, அவர் திருந்துவார் என்றால் திருந்தவில்லை. மேலும் நமது நிறுவனத் தலைவர் அண்ணாவை விமர்சனம் செய்து வருகிறார். இந்த தைரியத்தை அவருக்கு கொடுத்தது யார்?. தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில், பிஜேபி தலைவர் அண்ணாமலை செய்து வருகிறார்.
மோடியை பத்தி பேசாமல் மாநிலத்தில் அண்ணாமலை பெயர் மட்டும் தான் சொல்லணும், தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தும் என்ற அரசியலை அவர் கையில் எடுத்துள்ளார். 'என் மண் என் மக்கள்' என்பது தவறான தலைப்பு. இதை நாம் ஆதரிக்க கூடாது என்று நான் சொன்னேன். கர்நாடகாவில் காக்கிச்சட்டை போட்ட போலீஸ் அண்ணாமலைக்கு, இந்த மண் அவருக்கு மட்டும் சொந்தமா?, நேற்று மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்து என் மண், என் மக்கள் என்று உரிமை கொண்டாடினால் அதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?. நமது தலைவர்களையே விமர்சனம் செய்து கொண்டிருக்கும் போது, நாம் அந்த கூட்டணியில் இருக்க வேண்டுமா?. அதிமுகவுக்கான கொள்கை இருக்கிறது. குறிக்கோள் இருக்கிறது. லட்சியம் இருக்கிறது. நமக்கு நிறைய நெறிமுறைகள் இருக்கிறது.
அவர்களுக்கு நமது கொள்கையில் முரண்பாடு உள்ளது. இதனால் நாம் அவர்களோடு சேர்ந்து பயணிக்க முடியாது. என்னை பொருத்தவரை ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதியாகதான் அண்ணாமலையை பார்க்கிறேன். அனுபவம் இல்லாதவர் அவருக்கு அரசியல் முதிர்ச்சி, அரசியல் பக்குவம் வரவில்லை. எதற்காக இந்த கூட்டணி முறித்தோம் என்பதற்காக இதை சொல்லி வருகிறேன்.
தமிழ்நாட்டில் பாதி ரவுடிகள் உள்ள கட்சி பிஜேபி. கட்டப்பஞ்சத்துக்காரன், கந்து வட்டிக்காரன் தான் பிஜேபியில் உள்ளனர். பிஜேபி பழைய பிஜேபிகாரர்கள் இவருடைய ஆட்டம் பாட்டத்தை விரும்பவில்லை. எந்த இடத்திலும் பிஜேபி டெபாசிட் வாங்காது. பிஜேபிக்கு சொந்த காலில் நிற்கும் சக்தி கிடையாது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அவர் சக்தி என்ன என்று அவர்களே தெரிந்து கொள்வார்கள்" என தொடர்ந்து கூட்டம் முடியும் வரை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே பற்றியே முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் விமர்சித்து பேசினார்.
இதையும் படிங்க: இன்றைய பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்பார் - கரு.நாகராஜன்