தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் பேசியதாவது,
பொதுமக்கள் அரசிடமிருந்து தேவையான தகவல்களை பெறுவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலக பொது தகவல் அலுவலர்கள், மனுதாரர்களின் மனுவை சரிவர படித்து விதிகளின் கீழ் முறையாக குறிப்பிட்ட காலத்தில் பதில் தர வேண்டும். அவ்வாறு இல்லாமல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழி முறைகள் உள்ளது.
மேலும், பொது தகவல் அலுவலர்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் முக்கிய விதிகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு மனுதாரர்களின் மனுவிற்கு முறையாக பதில் அளிக்க வேண்டும். ஆகவே பொதுமக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்களை சரியாகவும், முறையாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் பதிலளிப்பது பொது தகவல் அலுவலர்களின் கடமை" என கூறினார்.