திண்டுக்கல்: பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த அன்னம்மாள்(55). கணவனைப் பிரிந்து வாழும் அன்னம்மாளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் இவர் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற அன்னம்மாள் வீடு திரும்பாததால் அவரை உறவினர்கள் பல இடங்களிலும் தேடி வந்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு பிறகு அவர் அப்பகுதியிலுள்ள ஒரு கண்மாய் அருகே உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் அழுகிய நிலையில் இருந்த உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.
இதற்கிடையே, துப்புரவு பணியாளரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஊர் பொதுமக்களும் சில அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். தொடர்ந்து உடற்கூராய்வு முடிந்து 2 தினங்கள் ஆகியும் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசாருக்கு நெருக்கடி கொடுத்தனர்.
கொலை சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால் போலீசார் கொலையாளியை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனிப்படை அமைத்து குற்றவாளியை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். போலீசார் பல்வேறு கோணங்களில் கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில் அன்னம்மாளின் மகள் புவனா(27) மீது சந்தேகம் அடைந்த போலீசார் புவனாவை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தன. உயிரிழந்த துப்புரவு பணியாளரின் மகள் புவனாவுக்கு சில ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததும் அவர்களுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி பழகி வந்ததும் விசாராணையில் போலீசாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து புவனாவின் ஆண் நண்பர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், புது ஆயக்குடியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் அன்னம்மாளை கொலை செய்தது தெரியவந்தது. கூலி வேலைக்குச் சென்று வரும் கனகராஜுக்கு ஏற்கனவே, திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் அன்னம்மாளின் மகள் புவனாவிடமும் பழகி வந்ததும், விஷயம் அறிந்த அன்னம்மாள் இவர்களை எச்சரித்ததும் தெரியவந்தது.
இதனிடையே, கனகராஜ் புவனாவை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு பலமுறை காட்டாயப்படுத்தி வந்ததும் இதற்காகவே கனகராஜ், அன்னம்மாளை கொலை செய்ய திட்டமிட்டு விறகு சேகரிக்க கண்மாய்க்கு சென்றபோது, அன்னம்மாளை நோட்டமிட்டு பின் தொடர்ந்த கனகராஜ் அவரைக் கொலை செய்து தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக, கனகராஜ் மீது வழக்குப் பதிவு செய்த பழனி தாலுகா போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் நேற்று (ஜூலை 26) அடைத்தனர். மகளுடன் பழகிய நபரை எச்சரித்ததற்காக, தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகன் அடித்துவிட்டதாக கூறி ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணால் பரபரப்பு