திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், கோவை மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான மூன்று நாள் விளையாட்டுப் போட்டிகள் கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியது.
நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள், பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி முதல்வர் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.
போட்டிகளில் உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட 33 பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
ஆடவர் ஒட்டுமொத்த தடகள சாம்பியன்ஷிப் பட்டம், கோவை ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரிக்கும் ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளின் சாம்பியன்ஷிப் பட்டம் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரிக்கும் வழங்கப்பட்டது.
மகளிர் ஒட்டுமொத்த தடகள சாம்பியன்ஷிப் பட்டம், பொள்ளாச்சி மகாலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரிக்கும், ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளின் சாம்பியன்ஷிப் பட்டம் கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்கும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தந்தையின் கனவை நிறைவேற்ற தங்கம் வென்று சாதனை படைத்த மகள்!