திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை உள்ளன.
இந்நிலையில் ரோப்கார் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை குடிபோதையில் வந்த இளைஞர் ஒருவர் ரோப்கார் வரிசையில் செல்வதுபோல் பாசாங்கு செய்து, அருகில் இருந்த பாறைகளின் வழியே ஏறி, வேகமாக ஆபத்தான முறையில் மலைமீது ஏறினார். இதுகுறித்து அங்கு இருந்த பக்தர்கள் கோயில் பாதுகாவலர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து செக்யூரிட்டிகள் மற்றும் கோயில் ஊழியர்கள் போதை ஆசாமியை விரட்டிப்பிடித்து கீழே அழைத்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த அடிவாரம் போலீசார் போதை ஆசாமியிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் மதுபானப்பாட்டில் இருந்ததும், குடிபோதையில் மலைக்கோயிலுக்கு மேலே சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்தச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியும்: "அரசு மருத்துவமனைகளில் காலாவதியாகாத மருந்துகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்"