திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உள்பட்ட 18ஆவது வார்டு ஆத்தூர் பகுதியில் முடிதிருத்தம் தொழில் செய்துவரும் ஐந்து குடும்பங்கள் தங்களது சொந்த இல்லத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது, அப்பகுதி முன்னாள் திமுக வார்டு உறுப்பினர் மணி என்பவர் தங்களை அந்த இடத்தை விட்டு வெளியேற்றும் நோக்கில் சில இடையூறுகளை செய்துவருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், முடிதிருத்தம் செய்யும் தொழிலாளர் குடும்பத்தினருக்கு நகராட்சி சார்பில் கிடைக்கும் குடிநீர் இணைப்போ, மின்சார வசதியோ, சாலை வசதியோ பெற விடாமல் தடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வள்ளியம்மாள் என்பவர் கூறுகையில், “பல ஆண்டுகளாக வசித்துவரும் நாங்கள் நகராட்சிக்கு உரிய முறையில் சொத்துவரி செலுத்தி வருகிறோம். தற்போது எங்களை எங்கள் வீட்டில் வாழவிடாமல் சூழ்ச்சி செய்துவருகின்றனர்.
எங்களது சமூகத்தை அடையாளம் காட்டி, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். இதனால், நாங்கள் எங்களது சொந்த வீட்டைவீட்டு வெளியேறி, வாடகை வீட்டில் குடியேறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்” என வேதனை தெரிவித்தார்.
மேலும், மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களுக்கு வேண்டிய குடிநீர் வசதி, மின்சார வசதி கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதற்கு இடையூறாக இருக்கும் முன்னாள் திமுக வார்டு உறுப்பினர் மணி என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மீது புகார்