திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 80 பேர் கண்டறியப்பட்டனர். இதில் திண்டுக்கல், பழனி, நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 76 பேர் ஆவர்.
அதேபோல் ராஜஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது. இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த 95 வயது மூதாட்டிக்கு கடந்த 18ஆம் தேதி கரோனா தொற்று கண்டறியப்பட்டது. டெல்லி சென்று திரும்பிய நபருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர் வீட்டினருகே வசிக்கும் மூதாட்டியின் குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து குடும்பத்தில் யாருக்கும் தொற்று இல்லாத நிலையில், மூதாட்டிக்கு மட்டும் தொற்று இருந்தது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மூதாட்டி மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதன்மூலம் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மீதமுள்ள 7 பேர் கரூர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு : சிறப்பு அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை