திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஆத்தூர், காமராஜர் நீர்த்தேக்கம் அருகே அமரநாதன் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்தில் சின்னச்சாமி, மல்லப்புரம் என்ற இருவர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆக.10) இரவு 9 மணியளவில் அமரநாதன் மற்றும் சின்னச்சாமி தோட்டத்தில் காவலுக்கு இருந்துள்ளனர். அப்போது சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் (19), வாஞ்சிநாதன் (20), முத்தையா (60), மார்க்கண்டன் (55), பைரவன் (19), லெட்சுமணன் (21) ஆகிய ஆறு பேரும் கையில் டார்ச் லைட்டுடன் சுற்றித் திரிந்துள்ளனர்.
இதனைக் கண்ட அமரநாதன் ஏன் இங்கு சுற்றித் திரிகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஈசல் மற்றும் பன்றிகளுக்கு வெடிவைக்க வந்ததாகக் கூறியுள்ளனர். அப்போது, பெரும் சத்தத்துடன் வெடி வெடித்துள்ளது. இதில் தோட்டத்தில் இருந்த நாய் உயிரிழந்தது.
இதையடுத்து அமரநாதன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், நாட்டு வெடிகுண்டு வைத்து பன்றிகளை வேட்டையாட முயன்ற ஆறு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 நாட்டு வெடிகுண்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.