திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கரோனா பெருந்தொற்றின் காரணமாக தடை உத்தரவு செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. உயர் நீதிமன்ற உத்திரவின் பேரில் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது .
தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் நெகிழி மாசில்லா கொடைக்கானல் என்ற தலைப்பில் வணிகர்கள் ,ஹோட்டல் உரிமையாளர்கள் , பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்,பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து எடுத்துரைக்கப்பட்டது கூட்டத்தில் பேசிய வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கரோனா காலகட்டத்தில் வாட்டர் பாட்டில்கள் போன்ற பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்தும் தேக்கம் அடைந்து இருப்பதாகவும், ஆகவே கூடுதலாக கால அவகாசம் வேண்டுமெனவும் தெரிவித்தனர்.
நெகிழி தடை ஊட்டியில் எவ்வாறாக பின்பற்றப்படுகிறது என கேட்டறிந்த பிறகு எந்தெந்த நெகிழி பொருட்களுக்கு தடை என நாளை தெரிவிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், " கொடைக்கானலில் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது; ஏற்கனவே உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான பணிகள் வரும் பிப்ரவரி 7 தேதி முதல் துவங்கும். கொடைக்கானலில் 4 இடங்களில் வாட்டர் ஏடிஎம்கள் வைக்கப்பட உள்ளது. மக்கும் குப்பைகளை தரம் பிரிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்
இதையும் படிங்க: கழிவுநீர் மறுசுழற்சியில் அசத்தும் சென்ட்ரல் ரயில் நிலையம்