தமிழ்நாட்டில் கரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் தொற்றிலிருந்து தப்ப முடியாமல் சிக்கித்தவித்துவருகின்றனர்.
அதிலும் முதியவர்கள் கரோனா பாதிப்பில் இருந்து மீள்வது கடினம் என்று கூறப்பட்ட நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 103 வயதுடைய முதியவர் ஒருவர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வியப்படையச் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 103 வயதுடைய முதியவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, கடந்த 18ஆம் தேதி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்டுவந்த தொடர் சிகிச்சை காரணமாக இன்று (ஜூலை 27) பூரண குணமடைந்து, கரோனாவை வென்றுள்ளார்.
இந்நிலையில், கரோனாவிலிருந்து மீண்ட முதியவரை இணை இயக்குநர் சிவக்குமார், மருத்துவ அலுவலர்கள் உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக, கர்நாடகத்தைச் சேர்ந்த ஹல்லம்மா என்ற 100 வயது மூதாட்டி கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அதிக வயதுடைய இந்தியர் என்று கூறப்பட்ட நிலையில், 103 வயதான திண்டுக்கல் முதியவர் அதனை முறியடித்துள்ளார்.
ஒருபுறம் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவந்தாலும் மறுபுறம் பலர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிவருவது நிம்மதியளிப்பதாக உள்ளது.