தருமபுரி அடுத்த அன்னசாகரகத்தைச் சேர்ந்தவர் முருகன். பூக்கடை நடத்திவந்த இவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய மனைவி கவிதா மற்றும் மகன்களான கவுதம், தமிழ்ச்செல்வன் ஆகிய மூவரும் அன்னசாகரகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
முருகன் இறந்த பிறகு முருகனுக்குச் சேரவேண்டிய சொத்தை தங்களுக்குப் பிரித்துத் தருமாறு முருகனின் சகோதரர்களிடம் அவரது மனைவி மற்றும் மகன்கள் கேட்டுள்ளனர். ஆனால் சொத்தெல்லாம் தரமுடியாது அதற்கு பதிலாக 13 லட்சம் ரூபாய் பணம் தருகிறோம் என்று முருகனின் சகோதரர்கள் சமரசம் பேசியுள்ளனர்.
ஆனால், பேசியபடி கவிதாவிற்குப் பணம் கொடுக்காமல் முருகனின் சகோதரர்கள் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து கவிதா பலமுறை காவல்துறையிடம் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கவிதாவும் அவரது மகன்களும் தங்களுக்கு வரவேண்டிய சொத்தை பிரித்துத் தராமல் ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர்.
அப்போது, அவர்கள் திடீரென பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தங்களது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனைக்கண்ட காவலர்கள், அவர்களைத் தடுத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்தவர்கள் திடீரென தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ‘திருவள்ளுவர் இந்து என்பதற்கு வரலாற்றில் ஆதாரமில்லை!’ - அமைச்சர் கே. பாண்டியராஜன்