தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கடைமடை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தனது தாய் தொட்டியம்மாளுடன் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், "எனது தாய் தொட்டியம்மாளுடன் நான் வசித்துவருகிறேன். தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். தனக்கு திருமணம் செய்துவைக்க தாய் தொட்டியம்மாள் ஏற்பாடு செய்தார்.
நான் படித்துவிட்டு வேலைக்குச் சென்ற பிறகு திருமணம் செய்துகொள்வதாக கூறினேன். அந்த நிலையில் எனது தாய் தொட்டியம்மாள் கடைமடை முன்னாள் தலைவர் கிருஷ்ணன், கரகத அள்ளி ஊராட்சி தலைவர் முத்துவேல் என்பவர் மூலமாக கடைமடை கிராமத்திலுள்ள சண்முகம் - சின்னம்மாள் ஆகியோரின் மகன் சக்திவேலுக்கு திருமணம் செய்துவைக்க முடிவுசெய்தனர்.
திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினர். 23.9.2020 அன்று விடியற்காலை கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூர் ஸ்ரீமுருகன் கோயிலில் திருமணம் செய்துவைத்தனர். சக்திவேல் இரவில் தன்னை மிரட்டி கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்துவருகிறார்.
சக்திவேலின் பெற்றோர் உள்ளிட்ட ஐந்து நபர்கள் எனது பெயரில் உள்ள வீட்டையும் எனது அம்மா பெயரில் உள்ள சொத்துகளையும், 'எங்கள் பெயருக்கு எழுதி வைத்துவிடுமாறு உன் அம்மாவிடம் சொல்' எனக் கட்டாயப்படுத்துகின்றனர்.
விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணம் செய்துவைத்து சொத்துகளை எழுதிவைக்க சொல்லி மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் உயிருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.