தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி (38). இவரது ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1921 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறந்த ஆண்டு தவறாகக் குறிப்பிடப்பட்டதால் அதனை மாற்றித் தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
அவரது மனுவில், ”பிறந்த ஆண்டு 1921 எனக் குறிப்பிடப்பட்டு இருப்பதுபோல் பார்த்தால், எனக்கு நூறு வயது ஆனதுபோல் உள்ளது. இதனால் என்னால், 100 நாள் வேலைத் திட்டத்திலும், மகளிர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர முடியவில்லை.
வங்கிக் கடன் கேட்டு விண்ணப்பித்தால் நூறு வயது உள்ளதால், என்ன வேலை உங்களால் செய்ய முடியும் எனக் கேட்டு நிராகரிக்கிறார்கள். தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆதார் அட்டையில் உள்ள பிழைகளைத் திருத்த மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இம்முறையாவது ஆதார் அட்டையில் உள்ள பிழையை மாற்றித் தர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.