தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் ஆ. மணி போட்டியிடுகிறார். இன்று தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் களம் காணும் தன்னை தேர்ந்தெடுத்தால் இந்த பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை முழுமையாகத் தீர்த்து வைப்பேன், என்றார்.
பின்னர் ஈடிவி பாரத் செய்திகளுக்காக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த தொகுதியில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் சட்டமன்றத்தில் கோரிக்கைகளாக எடுத்துக் கூறுவேன். தற்போது பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதனைப் போக்க வேண்டும் என்றால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மட்டும் இப்போதைக்கு போதாது.
ஆகவே, நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு வரும் வகையில் புதிய திட்டத்தை கொண்டுவருவேன். மேலும், நான் செல்லும் இடமெல்லாம் எனக்கு மக்கள் ஆதரவு இருக்கின்றது. தமிழக மக்களை கடந்த 8 ஆண்டுகளாக வஞ்சித்து வருகின்ற ஒரு ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது. ஆகவே அந்த ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.