தீபாவளி பண்டிகை நெருங்கும் தற்போதைய சூழ்நிலையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் வெங்காய விலை கிலோ 120 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிறிய வெங்காயத்தின் விலை 30 ரூபாயாகவும் பெரிய வெங்காயத்தின் விலை 40 ரூபாயாகவும் இருந்தது. இந்த ஆண்டு சிறிய வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாய்க்கும், பெரிய வெங்காயத்தின் விலை 120 ரூபாயாகவும் மூன்று மடங்கு விலை உயர்ந்து விற்பனையாகிறது.
வெங்காயம் விலை உயர்வு குறித்து நுகர்வோர் கூறுகையில், ''வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக மாதச் செலவு அதிகரிக்கிறது. இதேபோல் வெங்காயத்தின் பயன்பாடு குறைத்துக்கொண்டு உணவுகளைச் சமைத்துவருகிறோம்'' என்றார்.
தொடர்ந்து வெங்காய விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறுகையில், ''தமிழ்நாட்டிற்கு வெங்காயம் மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது.
இப்பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக வெங்காய வரத்து குறைந்தது. இதனால் விலை அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டினைக் காட்டிலும் இந்த ஆண்டு விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது'' என்றனர்.
இதனைத்தொடர்ந்து விவசாயிகள் கூறுகையில், ''வெங்காயம் மூன்று மாத பயிர். 90 நாளில் அறுவடை செய்யலாம். தொடர்ந்து தமிழ்நாட்டில் மழை பெய்துவருவதால் சிறிய வெங்காயத்தின் மகசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழைநீரில் வெங்காயம் நனைந்துள்ளதால் அழுகி வீணாகிவிட்டது.
வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வெங்காயம் அதிகமாகப் பயிரிடும் பகுதிகளில் சாகுபடி அளவு குறைந்தாலும் உள்ளூர் வெங்காயம் வரத்து இல்லாததால் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு இன்னும் இரண்டு மாதங்கள் நீடிக்கும்.
தற்போது வெங்காயத்தின் விலை உயர்ந்து விற்பனையானாலும் அவை வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம். வெங்காயத்தை ஒரு மாதத்திற்கு மேல் இருப்புவைக்க முடியாததால் விவசாயிகள் வெங்காயத்தை மகசூல் செய்தவுடன் உடனடியாக விற்பனை செய்துவிடுகின்றனர்.
வியாபாரிகள் அதனைப் பக்குவப்படுத்தி விற்பதால் தற்போதைய வெங்காயத்தின் விலை உயர்வு வியாபாரிகளுக்கு லாபத்தை தந்துள்ளது. ஆனால் உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு இந்த விலை உயர்வு லாபம் இல்லை'' என்கின்றனர்.
இதையும் படிங்க:வேளாண் சட்டங்களை அமல்படுத்த கோரிய இந்து தர்ம பரிஷத்தின் மனு தள்ளுபடி!