ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்கக்கோரி பெண் விடுதலை கட்சி தலைவர் சபரிமாலா தலைமையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தில் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 80 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 7 ஆண்டுகளாக பணி வாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் ஆயுள்காலம் ஏழு ஆண்டுகள் மட்டுமே, தற்போது ஆறு ஆண்டுகள் முடிந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிவாய்ப்பு வழங்கக்கோரி தருமபுரி, சேலம், விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட பட்டதாரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினரால் சபரிமாலா கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.