தர்மபுரி: கரோனா அலை காரணமாக மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் பொது முடக்கத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட ஒரு சில கடைகளை மட்டும் திறக்க அரசு தடை விதித்திருந்தது.
தர்மபுரி மாவட்டம் அரூரில் அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி துணிக்கடைகள் திறந்து விற்பனை நடைபெற்றுவருகிறது.
அரூர் நகர்ப்பகுதியில் கரோனா கட்டுப்பாட்டு விதிகளைக் கண்காணிக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் கரோனா தொற்று பாதிப்பால் விடுப்பில் உள்ளார்.
மேலும் அரூர் காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த வி. தமிழ்மணி பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால்,வேறு காவல் துணைக் கண்காணிப்பாளா் பணியமர்த்தப்படவில்லை.
இதனால் விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அலுவலர்கள் இல்லாததால், கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல், அரூர் நகர்ப் பகுதிகளில் சில துணிக்கடைகள் பாதியாகத் திறந்தும், சில கடைகள் முழுமையாகவே திறந்தும் சாதாரண நாள்களைப் போலவே விற்பனை நடைபெற்றுவருகிறது.
தடைசெய்யப்பட்ட கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றுவருகிறது. துணிக்கடைகளில் ஏராளமான மக்கள் கூடி தொற்று எளிமையாகப் பரவும் வகையில் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
எனவே பேரூராட்சி நிர்வாகத்தினரும் காவல் துறையினரும் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.