தருமபுரி: பென்னாகரத்தை அடுத்த அரகாசனஹள்ளி கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து நான்கு பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கோயில் நிலத்தைப் பொதுமக்கள் மத்தியில் ஏலம் விட வேண்டும் எனக் கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், சிலர் பென்னாகரம் வட்டாட்சியர் மூலமாகக் குறுக்கு வழியில் ஆவணங்களைப் பெற்று நிலத்தை விவசாயம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்து வருகிறது. இந்நிலையில், கிராமத்திலிருந்து பல்வேறு சமூகத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் விசாரணை செய்ய அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கிராம மக்களிடையே விசாரணை நடத்தியுள்ளார்.
அப்பொழுது, இந்த கோயில் நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு இருப்பதால், இதில் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார். இதனால், கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வீசி விட்டுச் சென்றுள்ளனர். தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, குடும்ப அட்டை மற்றும் ஆதார், கேட்பாரற்று கிடக்கிறது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் பேசிய கிராம மக்கள் தங்கள் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்க மறுப்பதாகவும் ஒருதலை பட்சமாக நடத்துகிறார்கள் என்றும் கூறினர். மேலும், இந்த நிலையில் அனைவரும் தங்கள் வீட்டில் கருப்பு கொடி கட்டப்போவதாகவும், அகதிகள் போல தங்கள் இருப்பிடம் விட்டுச் செல்வதை தவிர வேறு வழி இல்லை என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அதிநவீன வசதியுடன் கூடிய உதகை அரசு மருத்துவமனை திறப்பு எப்போது? - அமைச்சர் மா.சு. கூறிய தகவல்!