தருமபுரி: உலகம் முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளும் மக்களிடையே மும்முரமாக நடந்து வருகிறது. தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, புத்தாடை, பட்டாசு மற்றும் உணவு. முக்கியமாகத் தீபாவளியில் ஆடை விற்பனையும், பட்டாசு விற்பனையும் களைகட்டும். குறிப்பாகத் தீபாவளியையும் பட்டாசையும் பிரிக்கவே முடியாது என்று கூட கூறலாம்.
தற்போது உள்ள குழந்தைகளிலிருந்து இளைஞர்கள் வரை தீபாவளிக்குப் பட்டாசு கிடைக்கவில்லை என்றால் வீட்டையே ரெண்டாக்கிவிடுகிறார். ஆனால் அப்படிப்பட்ட மகிழ்ச்சியைக் கூட பறவைகள் சரணாலாம் மற்றும் பறவைகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பறவைகளுக்காகத் தியாகம் செய்கிறார்கள் என்றால் மிகையாகாது.
அந்த வரிசையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்திற்கு உட்பட்ட பல்லேனஹள்ளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மூன்று பெரிய புளியமரங்கள் மற்றும் ஒரு ஆலமரம் உள்ளது. இந்த 4 மரங்களும் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்து பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது.
மேலும் இந்த 4 மரங்கள் குடையாக அமைந்துள்ள பகுதியில் கீழ்ப் பகுதியில் அப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் வணங்கும் சக்தி வாய்ந்த முனியப்பன் சாமி கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலுக்கு மேல் புறத்தில் பறந்து விரிந்த புளியமரம் மற்றும் ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் தங்கள் வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றன.
அந்த வௌவால்கள் இரவில் இரைதேடிச் செல்லும், பகல் பொழுதில் இப்பகுதியில் உள்ள மரத்திற்கு வந்து தஞ்சம் அடைவதாகவும் கூறுகின்றன. மேலும் வௌவால்கள் மரத்தில் தஞ்சம் அடைந்துள்ளதால், அதனைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக அந்த ஊரில் தீபாவளி மட்டுமின்றி எந்தவிதமான பண்டிகைகளுக்கும் அப்பகுதி கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
ஏனென்றால் பட்டாசு வெடித்தால் மரத்தில் உள்ள வௌவால்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விடும் என்பதால் இந்த கிராமத்தில் கிராம மக்கள் தீபாவளி சமயங்களில் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையைப் பல ஆண்டுகளாகக் கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்துப் பேசிய அருகாமையில் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், "வௌவால்கள் கிராமத்தை விட்டு வெளியேறக்கூடாது என்பதற்காக மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. காலம் காலமாக தாங்கள் இதனைப் பின்பற்றி வருவதாகவும்" பொதுமக்கள் தெரிவித்தனர்.
தற்போது தீபாவளி என்றாலே பட்டாசு வெட்டு சத்தம் என்பதுதான் மக்களின் பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சி தரும் செயல். ஆனால் அத்தகைய மகிழ்ச்சி தரும் பட்டாசு வெடித்தலையே வௌவால்களுக்காகக் கிராம மக்கள் தியாகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.