தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள நாகமரையில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. இம்மாவட்டத்தில் சுமார் 45 அம்மா மினி கிளினிக்குகள் உள்ள நிலையில், நாகமரை பகுதியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை அருகிலுள்ள நெருப்பூர் பகுதிக்கு அலுவலர்கள் இடமாற்றம் செய்ய முயற்சிப்பதாக கூறி, நாகமரை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் 1200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவரும் நிலையில், அம்மா மினி கிளினிக் இப்பகுதியில் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாகமரை பகுதியில் துணை சுகாதார நிலையம் கட்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது.
ஆனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யப்படாத காரணத்தினால் பூட்டி கிடந்தது. தற்போது துணை சுகாதார நிலையம் அம்மா மினி கிளினிக்காக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பின் மருத்துவ வசதி கிடைத்ததால், அம்மா மினி கிளினிக் இடமாற்றம் செய்வதை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால், சம்பவ இடத்திற்கு சென்ற ஏரியூர் காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: 'பொதுமக்கள் பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்': மாவட்ட ஆட்சியர்