தருமபுரி: தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் வகையில், உழவர் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தை காலை, மாலை என இரண்டு நேரங்களிலும் செயல்படும் நிலையில், பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் சில்லறை விற்பனை கடைகளை விட, உழவர் சந்தையில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ சிறிய வெங்காயம் ரூ.25க்கு விற்பனை செய்யப்படும் சூழலில், உழவர் சந்தையில் ரூ.32க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. தரமான காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தால், வியாபாரிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் விலையை நிர்ணயம் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு பதில், வியாபாரிகளே அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படாததால், அடையாள அட்டை வைத்துள்ள வியாபாரிகள், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கி அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஒருசில விவசாயிகள், உழவர் சந்தைக்கு வெளியே காய்கறிகளை விற்கும் அவலமும் நிலவுகிறது.
எனவே முறையாக பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு அடையாள அட்டையை வழங்கி, உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தென்மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!