தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (36). இவர் தருமபுரி வட்டம் நூலஅள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் மிட்டா நூலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசமூர்த்தி (274/1a 18 1/2 சென்ட்) பூர்வீக நிலம் தனது தாத்தா பச்சையப்பன் அவரின் தந்தை காளியப்பன் பெயரில் இருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு பட்டா எண்ணில் காளியப்பன் மகன் பச்சையப்பன் மற்றும் சடையன் என்கின்ற பச்சையப்பன் தகப்பனார் கமலேசன் என்ற இருவரது பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது. இதனால் சடையன் என்பவர் தங்களுக்குச் சொந்தமில்லை. இந்த பெயரை நீக்கி தருமாறு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கணேசமூர்த்தி கேட்டுள்ளார்.
அதற்குக் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் தனக்கு ரூபாய் 25,000 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார். தொடர்ந்து டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் தனக்கு அவசரம் என கூறி ரூ.20 ஆயிரம் கொடுக்கும் படி கேட்டு உள்ளார். இதனை எடுத்து கணேசமூர்த்தி தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்குச் சென்று புகார் தெரிவித்தார்.
இந்த புகாரை அடுத்து இன்று (ஜன.05) லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர் பெருமாள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று (ஜன.05) மதியம் 2 மணி அளவில் கணேசமூர்த்தி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் ரூபாய் 20 ஆயிரம் லஞ்சப் பணத்தைக் கொடுக்கும் பொழுது மறைந்திருந்த காவல்துறை கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அமுதா ஆகிய இருவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 20 ஆயிரம் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: டி20 போட்டியில் ரோகித், கோலி? - அணியில் நிகழப்போகும் மாற்றம் என்ன?