தர்மபுரி: பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பி.கே. முருகனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். இன்று (மார்ச் 19) காரிமங்கலம் ராமசாமி கோயில் அருகே திறந்த வேனில் வாக்குச் சேகரிப்பின்போது கையில் பழைய செல்லாத 1000 ரூபாய் தாளைக் காட்டியபடி பரப்புரையை தொடர்ந்தார்.
அவர் பேசும்போது, "மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். பணமதிப்பிழப்பின் போது புதிய இந்தியா பிறப்பதாக மோடி தெரிவித்தார். ஆனால் அந்தச் சமயத்தில் மக்கள் அவர்கள் பணத்தை எடுக்கவே சிரமப்பட்டார்கள். ஜி.எஸ்.டி வரியைக் கொண்டு வந்ததும் மோடி தான்.
வெற்றி நடைபோடுகிறது தமிழகம் என்று சொல்கிறார்கள். நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 80 நாள்களும் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட கேமராக்கள் பழுதடைந்ததாக கூறுகிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறதென்று.
எல்லா அமைச்சர்களும் அம்மா இட்லி சாப்பிட்டார், பொங்கல் சாப்பிட்டார் என சொன்னார்கள். ஆனால் ஓர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நாங்கள் யாரும் அம்மாவை பார்க்கவில்லை, பொய் தான் சொன்னோம் என்று தெரிவித்துள்ளார். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, அதிமுக அமைச்சர்கள் பல்லாயிரங்கோடி ஊழல் செய்துள்ளதாக ஆளுநரிடம் பட்டியலை கொடுத்தவர்.
மேலும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தவர். தற்போது பெட்டியை வாங்கி, அவர்களோடே கூட்டணி வைத்துள்ளார். 15,000 கோடி ஜி.எஸ்.டி பணத்தை தர முடியாது என்ற மோடி, 8000 கோடி ரூபாயில் சொகுசு விமானத்தை வாங்கியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டித்திற்கு ரூ.10000 கோடி நீதி ஒதுக்கியுள்ளார். அது என்ன அவர் அப்பா வீட்டு பணமா..?
ஜெயலலிதா இருந்த வரை நீட்தேர்வு தமி்ழ்நாட்டிற்கு வரவில்லை. எடப்பாடி ஆட்சியானது, 1176 மதிப்பெண் எடுத்த அனிதாவிடம் தொடங்கிய முதல் பலி இதுவரை 3 ஆண்டுகளில் 14 மாணவர்களை கொலை செய்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நீட்தேர்வு ரத்து செய்து, கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இரட்டை இலைக்கு போடுகிற ஒவ்வொரு ஓட்டும் பாஜகவிற்கு தான், அவர்கள் வென்றால் கூவத்தூருக்கோ பாஜகவிற்கோ ஓடி விடுவார்கள் என்பதை உணர்ந்து நீங்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும். திமுகவை சட்டப்பேரவைத் தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் ஈபிஎஸ் - ஓபிஎஸ்'