தர்மபுரி: காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண் கணவனுடன் ஏற்பட்ட தகராறால் அவரைப் பிரிந்து தனது மகனுடன் வாழ்ந்துவருகிறார்.
இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு ஞாபகமறதி இருந்ததாகவும், இதனால் அவர் இரவில் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து பாலியல் வன்புணர்வு
இதற்கிடையே கடந்த 22ஆம் தேதி இரவு அப்பெண் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த வண்ணம்பூசுநர் காண்டீபன் (37) என்பவர், போதையில் பெண்ணின் வீட்டுக் கதவைத் தட்டி, பலவந்தமாக அவரை அப்பகுதியில் உள்ள கால்வாய் பக்கம் தூக்கிச்சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
பின் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டிச் சென்றுள்ளார். பின் தனது நண்பன் ஆண்ட்ரிஸிடம் இது குறித்து காண்டீபன் கூறியுள்ளார். இதையடுத்து ஆண்ட்ரிஸ் மறுநாள் ஜூன் 23ஆம் தேதி இரவு அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
காவல் துறையிடம் புகார்
அடுத்தடுத்து இரண்டு நபர்களால் பாலியல் வன்புணர்வுக்குள்ளான பெண், இது குறித்து காரிமங்கலம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், இவ்விவகாரம் குறித்து காவல் ஆய்வாளர் துரைராஜ் வழக்குப்பதிவு செய்து காண்டீபன், ஆண்ட்ரிஸ் ஆகிய இருவரையும் கைதுசெய்து, பாலக்கோடு நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பழனி அருகே 20 கொத்தடிமைத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம்