தர்மபுரி: சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த வீரன் (40) என்பவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். அவர் தனது மனைவி உமா மற்றும் மகள் சுஷ்மிதா (13) உடன் தனது சொந்த ஊரான மேட்டூருக்கு சென்றார். மீண்டும் அவர்கள் பெங்களூருவுக்கு இன்று (நவ.16) மதியம் 2.45 மணியளவில் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பொன்னேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடியது. இதில் திடீரென ஜீப் கதவு திறந்ததில் வீரன் மனைவி கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஜீப்பில் இருந்த வீரன் மற்றும் அவரது மகள் அருகிலிருந்த விவசாய கிணற்றில் விழுந்து மூழ்கினர்.
ஜீப் கிணற்றில் விழுந்து விபத்து
இச்சம்பவத்தை அறிந்த பாலக்கோடு தீயணைப்புத் துறையினர் கிணற்றிலிருந்து ஜீப்பை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் மீட்கும் பணியை பார்வையிட்டு தீவிரப்படுத்தினர்.
இருவர் உயிரிழப்பு
கிணற்றில் தண்ணீர் அதிகமாக உள்ளதால் ராட்சத மின் மோட்டார்களை பொருத்தி தண்ணீரை வெளியேற்றி சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் வீரன், அவரது மகள் சுஷ்மிதா மற்றும் ஜீப்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
பின்னர் அவர்களது சடலங்களை உடற்கூராய்விற்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஜீப் கிணற்றில் விழுந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெரியார் நகர் காய்கறி மார்க்கெட் வியாபாரி மீது தாக்குதல் - அலுவலர்களின் வீடியோ வைரல்