தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடியின் நுழைவுப் பகுதியில் கைகளுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வாக்களிக்க கைகளுக்குத் தேவையான கையுறை வழங்கப்பட்டது. உடல் பரிசோதனை செய்த பிறகே வாக்குச்சாவடி மையத்தில் ஒவ்வொரு வாக்காளரும் அனுமதிக்கப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாவட்டத்தில் 76 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 12 லட்சத்து 67 ஆயிரத்து 798 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண் வாக்காளர்கள் 6,41,175, பெண் வாக்காளர்கள் 6,26,464 மற்றவை 559 என, 870 மையங்களில் 1,817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்தநிலையில், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட எரிமலை மற்றும் கோட்டூர் மலை கிராமத்தில் காலை 9 மணி நிலவரப்படி, பொது மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாகத் தெரிவித்தனர். இதன் காரணமாக, இரு கிராமங்களுக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. சாலை வசதி இல்லாததால், தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அவ்விரு கிராம மக்கள் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாக்கு செலுத்தினார் நடிகர் அஜித்