தருமபுரி: தொப்பூர் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (72). தன்னுடைய இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் விவசாயம் செய்து கால்நடைகளை வளர்த்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சாமந்திப் பூச்செடிகளை தனது விவசாய நிலத்தில் நடவு செய்து பராமரித்து வந்தார்.
இந்நிலையில் சாமந்தி பூ செடிகள் பூக்கும் தருணத்தில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு பூக்கள் செடிகளிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பூச்சி தாக்குதலுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தியும் நோயின் தாக்கம் குறையவில்லை.
மனமுடைந்த விவசாயி மாரியப்பன் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சாமந்திப்பூ செடிகளை பூக்களோடு சேர்த்து டிராக்டர் மூலம் உழவு செய்தார். வயலில் டிராக்டர் ஓடிக்கொண்டிருந்த போது மனம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதார்.
இது குறித்து விவசாயி மாரியப்பன் பேசியதாவது, “நான்கு மாதங்களாக தொடர்ந்து பராமரித்து வந்த சாமந்திப் பூ செடி அறுவடைக்கு வரும் நேரத்தில் நோய் தாக்குதலால் வீணாகிப் போனது. கடன் வாங்கி உழவு செய்து, ஒரு பூ கூட அறுவடை செய்ய முடியாமல், உழவு செய்த கடனை கூட தர முடியாமல் உள்ளேன், அரசு உரிய இழப்பீடு தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இதையும் படிங்க: நின்றிருந்த லாரியில் மோதிய கார் : சம்பவ இடத்திலேயே பெண் பலி