ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகள் மேல் உள்ள மோகத்தால், பலரும் அதற்கு அடிமையாகி இருக்கும் இந்தக் காலகட்டத்தில், ஒரு சிலரோ விதிவிலக்காக இயற்கை சார்ந்த உணவுகளைத் தேடிச் செல்கின்றனர்.
அப்படியான இயற்கை உணவுப் பிரியர்களுக்காகவே தருமபுரி நகரப் பகுதியிலுள்ள பாரதிபுரம் என்ற இடத்தில் 'தமிழர் மரபுச் சந்தை' செயல்படுகிறது. மற்ற சந்தைகள் போல் அல்லாமல், இங்கு முழுவதும் இயற்கை சார்ந்த உணவுகளை மட்டுமே விற்பனை செய்யக்கூடிய, 30க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும், காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை இந்த சந்தை செயல்படுகிறது.
![மரபுச் சந்தை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8667900_01-3.bmp)
நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி முட்டை, மீன் வகைகள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், தானிய வகைகளான கம்பு, கேழ்வரகு, திணை, சோளம், சாமை போன்றவையும், குதிரைவாலி, சீரக சம்பா, வெள்ளை பொன்னி, கருப்பு கவுனி உள்ளிட்ட 10 வகையான அரிசி வகைகள், கலப்படம் இல்லாத தேன் உள்ளிட்ட ஏராளமான இயற்கை உணவுப் பொருள்கள் இங்கு கிடைக்கின்றன.
உணவே மருந்து
இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட சிறுதானியங்களைக் கொண்டு வெண்பூசணி தோசை, முடக்கத்தான் தோசை, சாமை தோசை, கேழ்வரகு சப்பாத்தி போன்றவற்றை விற்பனை செய்யும் கடையும் இங்கு அமைந்துள்ளது.
தோசைக்கு மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துவதால் அதிக சுவையுடன் இருப்பது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமாகவும் இருப்பதால், சந்தைக்கு வரக்கூடிய மக்கள் இதனை விரும்பி சாப்பிடுகின்றனர்.
![மரபுச் சந்தை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8667900_21.bmp)
மூலிகை தேநீர் வகைகள்
அதிமதுரம், அஸ்வகந்தா, திப்பிலி ஆடாதொடை, துளசி உள்ளிட்ட 15 வகை மூலிகை கலந்த தந்தூரி தேநீர் இச்சந்தையில் விற்கப்படுகிறது. மண் அடுப்பில் மண் குடுவையை சூடாக்கி அதில் மூலிகை கலவையை ஊற்றி தயாரிக்கப்படும் தேநீர் நல்ல சுவையுடனும், மணமுடனும் இருப்பதால், இதனை பருகுவதற்காகவே பலர் இந்த சந்தைக்கு வருகின்றனர்.
![மரபுச் சந்தை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8667900_01-2.bmp)
கிராமப்புற விவசாயிகளுக்கு வருமானத்திற்கான இடமாகவும், இயற்கை உணவு விரும்பிகள் தேடி வரக்கூடிய இடமாகவும் இச்சந்தை திகழ்கிறது.
இதுபோன்ற மரபுச் சந்தை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டு, அது முறைப்படுத்தப்பட்டால், இயற்கை விவசாயிகள் பெரிதும் பயன்பெற நல்ல வாய்ப்பாக அமையும்.