தர்மபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆறு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால், அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குளிக்க பரிசில் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லாத வகையில் வருவாய்த்துறையினர், தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவிலுள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூலை 11) காலை அணைகளில் இருந்து 72,713 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டன. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தைத் தொடர்ந்து, மேலும் அணையில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 964 கன அடி நீர் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று மாலை நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 60,000 கனஅடியாக இருந்தது. இன்று (ஜூலை 12) காலை நிலவரப்படி நீர்வரத்து 1லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் ஐந்தருவி சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து ஒரே கிராமத்தில் தீ விபத்து - காவல்துறை விசாரணை