தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தக்காளி சந்தை உள்ளது. இச்சந்தையிலிருந்து தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாலக்கோடு தக்காளி சந்தைக்கு, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான பென்னாகரம், மாரண்டஅள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளிகளை விற்பனைக்கு கொண்டுவருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, தக்காளி விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது. தக்காளி வரத்து அதிகரித்ததால், ஒரு கிலோ தக்காளியை ஐந்து ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்ற வாரங்களில் கிலோ 30 முதல் 60 ரூபாய்வரை விற்பனையான தக்காளியின் கொள்முதல் விலை தற்போது ஐந்து ரூபாய் ஆகவும், விற்பனை விலை ஏழு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரையும் விற்பனையாகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியால், விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி தக்காளி சாகுபடி செய்தனர். இந்நிலையில், தக்காளி மகசூல் தரும் இம்மாதத்தில் விலை கடுமையாக குறைந்ததால், அவர்கள் கவலையடைந்துள்ளனர்.