தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், பாலக்கோடு பகுதிகளில் தமிழ்நாடு அரசின் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின்கீழ் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2005ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக தனித்துவம்வாய்ந்த தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார். அந்த ஆண்டு தனியாக விளையாட்டுத் துறைக்கு அமைச்சர் ஒருவரையும் நியமித்தார்.
விளையாட்டுத் துறைக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து தனி முக்கியத்துவம் அளித்துவருவதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பயன்பெறுகின்றனர். உடற்கல்வி மூலம் மாணவர்களின் சுய ஒழுக்கம், தன்னம்பிக்கை, சுயமரியாதை போன்ற பண்புகள் வளர்கின்றன. விளையாட்டு ஒரு மனிதனை ஊக்கத்துடன், ஆரோக்கியத்துடன் உருவாக்கி, வாழ்வில் எந்த ஒரு கடினமான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை எளிதில் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலை வழங்குகிறது.
தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 52 கிராம ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 76 கோடியே 23 லட்சத்து ஒன்பதாயிரத்து 300 ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 251 கிராம ஊராட்சி பேரூராட்சி பகுதிகளில் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு கபடி, வாலிபால், பூப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கான ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சராக இருந்தபோது பொன்னர் செய்தது என்ன? - ஜெயக்குமார்