தருமபுரி: தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியைச் சார்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்த, இடைத்தரகர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தனர். இதில் ஒருவரது உடல் சித்தேரி மலைப் பகுதியில் வீசப்பட்டுக் கிடந்தது. மற்றொருவர் ஆந்திர மாநிலத்தில் அடையாளம் தெரியாத சடலமாக அடக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பு மையத்தின் உண்மை அறியும் குழுவினர் ஆந்திராவிற்கு சென்று விசாரணை செய்து அறிக்கையைத் தயார் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக மக்கள் கண்காணிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “ஆந்திர மாநிலத்தில் வனத்துறையினரால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட ராமன் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் தருமபுரி மாவட்டம் சித்தேரியை சார்ந்தவர்கள்.
முதலமைச்சர் உதவி
பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற, காவல்துறை சித்திரவதையை, ஜெய்பீம் படத்தின் மூலம் அறிந்து இருளர் இன மக்களுக்குப் பல உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் செய்துள்ளார். இந்த செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களும், மலைவாழ் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை முதலமைச்சருக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடி இன மக்களாக இருந்தாலும், வேறு சமூகமாக இருந்தாலும் தங்களது கிராமங்களை விட்டுப் பிழைப்பிற்காக வெளி இடங்களுக்கு செல்லும் நிலை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று முதலில் கேட்டுக் கொள்கிறேன்.
ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த ராமன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கூடிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. அந்த மாநிலத்தில் வாழக்கூடிய மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்த அரசுக்கு உண்டு. இந்த அப்பாவி மலைவாழ் பழங்குடியின மக்களை ஆசை வார்த்தைகளைக் கூறி, இடைத்தரகர்கள் இந்த தொழிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
இடைத்தரகரக்ள் மீது நடவடிக்கை
இந்த இடைத்தரகர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இடைத்தரகர்கள் தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள், ஆந்திர மாநிலத்திலும் இருக்கிறார்கள், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் சடலமாக சந்தேகதிற்கிடமான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களின் இறப்பிற்கு உரிய காரணத்தை காவல் துறை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு காவல் துறையில் எத்தனையோ உளவுப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தரகர்களை கண்டுபிடிப்பதில் ஏன் இவ்வளவு மெத்தனம் காட்டி வருகிறார்கள்.
இந்த தொழிலுக்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் செல்வதை நிரந்தரமாகத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.
கடப்பா சிறையில் இருப்பவர்களை, இலவச சட்டப் பணிகள் குழுவினர் முன்வந்து, பிணையில் எடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஹென்றி திபேன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்குவாரியில் படுத்திருந்த சிறுத்தை: விவசாயிகள் பீதி!