தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மொரப்பூர் காப்புக் காட்டில் மயில், புள்ளிமான், காட்டெருமை., மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. விவசாயி தேவராஜ் என்பவர் பால் விற்பனைக்காக அண்ணாமலைபட்டி அருகே உள்ள காப்புக் காட்டின் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது காட்டுப்பகுதிக்குள் இருந்து புள்ளி மான் ஒன்று, அபாய ஓலம் எழுப்பும் ஒலி கேட்டுள்ளது.
இந்த சத்தத்தைக் கேட்டதும் பதறிப்போன விவசாயி தேவராஜ், மான் சத்தம் போடும் இடத்தை நோக்கி சென்றார். அங்கு ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று மானை லாவகமாக தன் தசையால் சுற்றிக்கொண்டு விழுங்க தொடங்கியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேவராஜ் அப்பகுதி மக்களுக்கு தகவல் அளித்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் உடனடியாக மொரப்பூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

மலைப்பாம்பு மானை விழுங்கும் செய்தி அருகிலுள்ள கிராமங்களுக்கும் பரவியதால் பொதுமக்கள் அப்பகுதியில் கூடினர். பொதுமக்களின் சத்தத்தை கேட்ட மலைபாம்பு மானை தனது இறுகிய பிடியிலிருந்து விடுவித்தது. இருப்பினும் அதன் பிடியில் இருந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மலைப்பாம்பு புள்ளிமானை விழுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பார்த்த மக்கள், வனப்பகுதியையொட்டி தங்களது விவசாய நிலங்கள் இருக்கின்றன. இரவு நேரத்தில் மான், மயில் ஆகியவை விவசாய நிலைங்களை சேதப்படுத்தி வருகிறது. இரவு நேரத்தில் மலைப்பாம்பு உலாவுவது பயத்தை தருகிறது. எனவே, இந்த மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடுமாறு அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: 'பஞ்சமி நிலங்களை ஸ்டாலின் உரியவர்களிடம் ஒப்படைப்பார்' - ஸ்டாலினை சீண்டும் ராமதாஸ்