தர்மபுரி மாவட்டம் சிவாடி ஊராட்சிக்குள்பட்ட கந்துகால்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனது குடும்பத்தாருடன், ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்தை அலுவலகத்திற்குள் உள்ளே வைத்து பூட்டுப்போட்டு வாசலில் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டார். தன் வீட்டின் மேல் பகுதியில் புதியதாகக் கட்டடம் கட்ட ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம், அனுமதி வழங்க மறுப்பதாகக் கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டதாகத் தெரிவிக்கிறார்.
இச்சம்பவம் குறித்து பேசிய ஊராட்சி மன்றத் தலைவா் ஆறுமுகம், அரசின் சட்டதிட்டங்கள் விதிகளின்படி சம்பந்தப்பட்ட கட்டடத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்றும், அந்தக் கட்டடத்திற்கு வங்கியில் கடன் பெற்றுள்ளதால், எப்படி அதற்கு அனுமதி வழங்கமுடியுமெனவும் எனத் தெரிவித்தார்.
மேலும் அலுவலகத்தில் வைத்து பூட்டிய நபா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு பூட்டிய அலுவலகத்தினைத் திறந்துவிட்டனா்.