தருமபுரி மாவட்டம் வத்தல் மலையிலிருந்து வரும் மழைநீரை அதன் அடிவாரப் பகுதிகளில் தேக்கிவைக்க தமிழ்நாடு அரசு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு ரூ.6 லட்சம் மதிப்பில் தடுப்பணை ஒன்றை கட்டியது.
இதனைத் தொடர்ந்து, தருமபுரியில் கடந்த மூன்று வாரங்களாக பெய்துவந்த மழையால் வத்தல் மலையிலிருந்து மழைநீர் வரத்தொடங்கியது. இந்நிலையில் அங்கு கட்டப்பட்ட தடுப்பணை முறையான கட்டுமானம் செய்யாத காரணத்தால் மழைநீர் தேங்கியவுடன், தடுப்பணை உடைந்து தண்ணீர் அருகிலிருக்கும் சாலையில் வழிந்தோடி வருகிறது.
இதன் விளைவாக, அத்தடுப்பணையின் சேமிப்புநீரை நம்பியுள்ள ஏழு கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பணையிலிருந்து வெளியேறும் நீர் அருகிலுள்ள சாலையின் குறுக்கே ஓடி வருவதால் இன்று காலை முதலே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது நீரின் அளவு குறைந்துள்ளதால் மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
வத்தல் மலை, விவசாயிகள் உடைந்த தடுப்பணையில் கற்களை வைத்து தடுக்க முயற்சித்தும் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து நீர் வெளியேறிவருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக தருமபுரியில் சரிவர மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டது.
தற்போது மழைப் பெய்தும் விவசாயிகள் அதைப் பயன்படுத்த முடியாமல் வருத்தத்தில் ஆழ்ந்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுப்பணையை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: