'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். இன்று தர்மபுரி வந்திருந்த அவர், தர்மபுரி அன்னசாகரம் பகுதியில் வாழ்ந்துவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படைப்பிரிவில் பணியாற்றிய தியாகி சிவகாமி அம்மையாரை அவரது வீட்டில் சந்தித்தார்.
பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய கமல் ஹாசன், "தென்னகத்தின் நலன் காக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம். இந்தியாவின் தலைவாசலாக தமிழ்நாடு மாறும், தென்னகத்தை தமிழ்நாடு தலைமை ஏற்கும் காலம் வரும்.
'நான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்தவன்'
எல்லோரும் என்னை பார்த்து கேட்கும் கேள்வி எம்ஜிஆரை ஏன் நீங்கள் கையில் எடுக்கிறீர்கள் என்று, எம்ஜிஆர்தான் என்னை கையில் எடுத்தார். நான் நடிகராக இல்லாமல் இருந்திருந்தால் அவரை பார்க்கும் வாய்ப்புகூட எனக்கு கிடைத்திருக்காது. நான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்தவன். எம்ஜிஆா் எனக்கு உணவு ஊட்டிவிட சாப்பிட்டிருக்கிறேன், நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறார். பலவற்றை கற்றுக்கொண்டு, தற்போது மேடையில் தோன்றி இருக்கிறேன. நல்லவர்கள் யாரும் எம்ஜிஆர் பெயரை ஏற்றுக்கொள்ளலாம்.
எம்ஜிஆர் போட்ட இரட்டை இலையில் இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாற்காலி சண்டையில் இழுத்து உடைக்கத்தான் போகிறார்கள் அதனை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் மறைமுகமாக தாக்கி பேசினார்.
இதையும் படிங்க:22 ஆண்டுகளுக்குப்பிறகு கமலுடன் இணையும் பிரபுதேவா?