தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குள்பட்ட மாக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் நவீன் குமார். இவர் மாமரத்து பள்ளம் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிந்துவந்தார். அப்போது அதே கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து உள்ளார்.
நவீன் குமார் காதலித்து வந்தது மாணவியின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் கல்லூரிக்கு வந்து இதுதொடர்பாக முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் முதல்வர் நவீன் குமாரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவர் நவீன், வீட்டிற்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மகன் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நவீனின் பெற்றோர்கள், காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர்.
மகன் உயிரிழப்பிற்கு முதல்வர்தான் காரணம் என பெற்றோர்கள் முதல்வரின் வீடு முன்பு போராட்டம் நடத்தினர். காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பென்னாகரம் காவல் துறையினர் மாணவரின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ‘பிப்ரவரி 14ஆம் தேதியை ராணுவ வீரர்கள் தினமாக்குங்கள்’ - சிஆா்பிஎப் வீரரின் மனைவி உருக்கம்