முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 104ஆவது பிறந்த நாள் விழா, தருமபுரி வள்ளலார் திடலில் அதிமுக சார்பில் நேற்று (ஜனவரி 18) நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தருமபுரி மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த உடனே முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுத்தார் எனவும், வேளாண் துறை சார்ந்த டிப்ளமோ பட்டப்படிப்பு கல்லூரியும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்ற முதலமைச்சர் உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார்.
நலத்திட்ட உதவிகள் செய்து வரும் முதலமைச்சரை எதுவுமே செய்யவில்லை எனக் கூறி ஸ்டாலின் தரக்குறைவாக பேசி வருவதாகவும், தலைகீழாக நின்றாலும் அவரால் முதலமைச்சராக முடியாது என்றும் விமர்சித்தார். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது திமுக அல்ல, தருமபுரி மாவட்டத்தில் அந்த திட்டத்தை செயல்படுத்த வித்திட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்றார்.
2005ஆம் ஆண்டு தான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூட்டுக் குடிநீர் திட்டத்தை தயார் செய்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அன்பழகன், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு 10 விழுக்காடு பணிகள் கூட நடைபெறவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.