தமிழ்நாடு காவல் நிலையங்களுக்குக் காவல் துறை சார்பில் ரகசிய கேமராக்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள 15 காவல் நிலையங்களுக்கு கேமராக்கள் வழங்க முடிவுசெய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 15 காவல் நிலையத்திலுள்ள காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் நேற்று (மார்ச் 3) கேமராக்களை வழங்கினார்.
கேமராவைப் பயன்படுத்தும் 15 காவல் துறையினருக்கும் ஏற்கெனவே கேமராவை கையாளுவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தோள்பட்டையில் பொருத்தப்படும் இந்தக் கேமரா ஆர்ப்பாட்டம், கலவரம், போராட்டம் ஆகிய நிகழ்வுகளைப் பதிவுசெய்ய பயன்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளைத் துல்லியமாகப் பதிவுசெய்யும் வகையிலான உயர் தொழில்நுட்பம் கொண்டதாக இந்தக் கேமராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன எனக் காவல் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கேமராக்களை வழங்கும் நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ், தொழில்நுட்பப் பிரிவு காவல் ஆய்வாளர் பால்ராஜ், தொழில் நுட்பப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திவ்யா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: சிறப்பாகச் செயல்பட்ட காவலர்களைப் பாராட்டிய மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர்