பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு உயர்நிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி கடந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 11, 12ஆம் வகுப்பில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் முதுகலை ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படவில்லை என்பதால் மாணவிகள் பாடம் கற்பதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.
ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால், அருகில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் வந்து இப்பள்ளி மாணவிகளுக்குப் பாடம் நடத்தி வந்தனர். தற்பொழுது பள்ளி திறந்து இரண்டு வாரகாலம் ஆகியும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பணியமர்த்தப்படவில்லை. மேலும் கடந்த ஆண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து வந்து பாடம் நடத்திய ஆசிரியர்களும் பள்ளிக்கு வருவதில்லை. இதனால் கடந்த இரண்டு வார காலமாக மாணவிகள் தினமும் பள்ளிக்கு வந்து அமர்ந்துவிட்டு மாலையில் வீடு திரும்புகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் இன்று காலை பெரியாம்பட்டி பேருந்து நிலையம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் ஆசிரியர்களைப் பணி அமர்த்த வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து பள்ளி ஆசிரியர்களும் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அரசின் கவனத்திற்கு இதை எடுத்துச்சென்று, விரைவாக ஆசிரியர்களை நியமிக்கவும், அதுவரை மாற்று ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தவும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து மாணவிகள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.